லெமன் காபி உடல் எடையை வேகமாக குறைக்க உதவுமா? உண்மை என்ன? - CBSE INFO

Friday 12 November 2021

லெமன் காபி உடல் எடையை வேகமாக குறைக்க உதவுமா? உண்மை என்ன?

 வீட்டில் இருந்து வேலை செய்து உடல் பருமனாகிவிட்டதா? உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பதற்கு உடற்பயிற்சிகளுடன் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

பெரும்பாலான மக்கள் எடை இழப்பு விஷயத்தில் குறுக்குவழிகளைத் தேடுகிறார்கள். இதனால் சீரக நீர், மஞ்சள் நீர், தேன் கலந்து எலுமிச்சை நீர் என்று ஏராளமான பானங்கள் உடல் எடையை திறம்பட குறைக்கும் தந்திரங்களாக இணையத்தில் உலா வருகின்றன. சிலர் கடுமையான உடற்பயிற்சிகளை செய்தால் உடல் எடை குறையும் என்று உறுதி அளிக்கிறார்கள்.

சமீபத்தில் எலுமிச்சை காபி/லெமன் காபி உடல் கொழுப்பு வேகமாக குறைப்பதாக ஒரு டிக்டாக் பயனர் பரிந்துரைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடுதலாக இந்த காபி தலைவலி மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் அளிப்பதாக நம்பப்படுகிறது. இந்த கூற்று உண்மை தானா என்பதை இப்போது காண்போம்.


எலுமிச்சை மற்றும் காபி

எலுமிச்சை மற்றும் காபி ஆகிய இரண்டுமே சமையலறையில் காணப்படும் பொருட்களாகும். இவை இரண்டுமே சத்துக்களைக் கொண்டவை மற்றும் தனித்துவமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. எடை இழப்பு என்று வரும் போது, இவை இரண்டுமே மிகவும் நன்மை பயக்கும் என்று நம்பப்படுகிறது.


காபியின் நன்மைகள்:

உலகளவில் ஏராளமானோர் விரும்பி குடிக்கும் பானம் தான் காபி. இந்த காபியில் உள்ள காப்ஃபைன் உடல் மெட்டபாலிசத்தை வேகப்படுத்துகிறது, மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது, மனநிலையை மேம்படுத்துகிறது மற்றும் விழிப்புணர்வை அதிகரிக்கிறது.


எலுமிச்சையின் நன்மைகள்:

எலுமிச்சையின் நன்மைகளைச் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. இது வயிறு நிறைந்த முழுமையை ஊக்குவிக்கிறது, திருப்தியை அதிகரிக்கிறது மற்றும் தினசரி கலோரி உட்கொள்ளும் அளவைக் குறைக்கிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது ப்ரீ-ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை தடுக்கிறது.


லெமன் காபி எடை இழப்பில் பயனுள்ளதா?

எலுமிச்சை மற்றும் காபி ஆகிய இரண்டும் ஆரோக்கியமானவை என்பது உண்மை தான். ஆனால் இவை உடல் கொழுப்பை எரித்து, அழகிய உடலமைப்பை விரைவில் பெற உதவும் என்பது சற்று சந்தேகம் தான். காபியில் எலுமிச்சையை சேர்ப்பது பசியைக் குறைத்து, வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தும். ஆனால் கொழுப்பை எரிப்பது கொஞ்சம் கடினம் தான்.

உடல் கொழுப்பைக் குறைப்பது என்பது எளிதான காரியமல்ல. அதுவும் வெறும் எலுமிச்சை நீரை மட்டும் குடித்து குறைப்பது என்பது கடினமே. ஒருவரது எடை குறையும் போது உடல் பல மாற்றங்களுக்கு உட்படுகிறது. அதில் இரவில் நல்ல தூக்கம் வரும், நோய்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் குறையும், மனநிலை மேம்படும் மற்றும் ஆரோக்கியமாக இருப்பதை உணரக்கூடும்.

லெமன் காபி தலைவலியைக் குறைக்க மற்றும் செரிமானத்தை அதிகரிக்க உதவுமா?

லெமன் காபி தலைவலியில் இருந்து நிவாரணம் அளிப்பதாகவும், செரிமானத்தை மேம்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. இருப்பினும், இந்த விஷயத்தில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. சில ஆய்வுகள் காப்ஃபைன் இரத்த நாளங்களை இறுக்கும் விளைவைக் கொண்டிருப்பதால், இது தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது என்று கூற, வேறு சில ஆய்வுகள் அதிகப்படியான காப்ஃபைனை உட்கொள்வது தலைவலிக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றன.

வயிற்றுப் போக்கு விஷயத்தில் கூட, இந்த லெமன் காபி பானம் செரிமான ஆரோக்கியத்தை எவ்வாறு அதிகரிக்கும் என்பதை கூறும் தெளிவான ஆய்வு எதுவும் இல்லை. பொதுவாக வயிற்றுப்போக்கால் அவதிப்படும் போது மலத்தை இறுக்க திட உணவுகளை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. எனவே லெமன் காபி குடிப்பது நல்ல யோசனையல்ல. எனவே சான்றுகள் எதுவும் இல்லாததால், லெமன் காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை உறுதியாக கூற முடியாது. இதுக்குறித்த ஆய்வு நிறைய தேவைப்படுகிறது.


லெமன் காபி தயாரிக்கும் முறை:

இதுவரை பார்த்ததில், காபியில் எலுமிச்சையை சேர்ப்பதால் நிறைய நன்மைகள் இல்லை என்பது தெளிவாகிறது. நீங்கள் இன்னும் முயற்சிக்க நினைத்தால், ஒரு கப் காபியில் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடியுங்கள். ப்ளாக் காபியில் தான் எலுமிச்சை சாற்றினை சேர்க்க வேண்டுமே தவிர, பால் காபியில் சேர்க்கக்கூடாது. லெமன் காபியை ஒரு கப்பிற்கு மேல் குடிக்க வேண்டாம். முக்கியமாக உடல் எடையைக் குறைக்க லெமன் காபியை முயற்சிக்க விரும்பினால், தினசரி உடற்பயிற்சியுடன், ஆரோக்கியமான உணவையும் உட்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment