தேகப்பொலிவு முதல் குடல் ஆரோக்கியம் வரை; மக்காச்சோளத்தின் மகத்துவம்.! - CBSE INFO

Friday 12 November 2021

தேகப்பொலிவு முதல் குடல் ஆரோக்கியம் வரை; மக்காச்சோளத்தின் மகத்துவம்.!

 

தகிக்கும் செங்கனல். துளிரும் வெண்புகை. சூடேறும் பச்சை சோளம். நம்மை சுண்டி இழுக்கும் அற்புத உணவுச் சூழல் இவை.

பெரும்பாலான மலை சுற்றுலா தலங்களில் மக்காச் சோளக் கடைகள் வீற்றிருப்பதைப் பார்க்க முடியும். மலையின் சில்லென்ற பனிமூட்ட சூழலுக்கு, சோளத்தின் சூடான ஆவி அக்மார்க் காம்பினேஷன் அல்லவா! அசைவ `பார்-பிக்யூ' போல சைவ உணவுப் பிரியர்களுக்கான பார்-பி-க்யூவாக சுட்ட சோளத்தைச் சொல்லலாம்.


குளிருக்குத் தோதான சுவை:

பச்சை சோளத்தை முழுமையாக எடுத்து, உலர்ந்த சருகுகள் மற்றும் கரியின் உதவியுடன் தகித்துக்கொண்டிருக்கும் கனலில் சுட்டு, தங்க நிறத்தில் இருக்கும் சோளத்தின் மீது கறுப்பு நிறம் படிய வழங்கப்படும் சுட்ட சோளத்தின் சுவை அலாதியானது. மிளகாய்ப் பொடியில் பாதி வெட்டிய எலுமிச்சம் பழத்தைத் தோய்த்து, சுட்ட சோளத்தின் மீது தடவி, சூடு பறக்க சுவைக்கும் போது அடடா. குளிருக்கு தோதான சுவை அது! சோளத்தின் சருகுகளுக்குள் சுட்ட சோளத்தை வைத்து பற்களால் கடித்து ருசிப்பது சுற்றுலா சிற்றுண்டிகளின் ஸ்பெஷல்!


தங்கம் வார்க்கும் தச்சன்:

அதுவும் பச்சை சோளத்தை சுட்டுத் தரும் அழகு இருக்கிறதே. கனல் பொறிகள் பறக்க, தங்கத்தை வார்ப்பதைப் போல, தங்க நிறத்திலிருக்கும் சோளத்தை வார்த்துக் கொடுக்கும் நேர்த்தி அழகானது! `பச்சை சோளத்தை சுட்டுக் கொடுப்பீர்களா, இல்லை வேக வைத்த சோளத்தை சுட்டுக் கொடுப்பீர்களா.' என்ற கேள்விக்கு பச்சை சோளத்தை சுட்டு சாப்பிடுவதுதான் தனித்துவமான சுவையைக் கொடுக்கும் சார். வேக வைத்து சுட்டு சாப்பிட்டால் அதன் தன்மையே மாறிவிடும்.' என்றார் அந்த சோளப் பெண்மணி!

`வேக வைத்த சோளத்தை சுட்டுத் தரக் கேட்டாலும் சுட்டுத் தருவோம், ஆனால் சுவைக்கு நாங்கள் பொறுப்பல்ல.' என்று புன்னகையுடன் பதிலளித்தார் அவர்!

`வியாபார ரீதியாக பார்க்கும் போது, சுற்றுலா வருவோர்களின் விருப்பமான சிற்றுண்டித் தேர்வில் எங்கள் சோளத்திற்கு எப்போதுமே முதன்மையான இடமுண்டு! மேலும் ஆரோக்கியமான உணவுப் பொருளை வழங்குகிறோம் என்ற திருப்தியும் எங்களுக்கு அதிகமுண்டு.' என முடித்தார்.

சுட்ட சோளம் தவிர, வேக வைத்த சோளமும் அங்கு கிடைக்கிறது. அதற்கான தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது. சுட்ட சோளத்தைப் பற்களால் கடித்துச் சுவைக்க முடியாதவர்கள் வேகவைத்த சோளத்தை நாடுகிறார்கள்.


மருத்துவப் பலன்கள்:

வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் தேவைக்கு ஏற்ப நார்ச்சத்தையும் ஒவ்வொரு சோளமும் நமக்காக சுமந்துகொண்டிருக்கின்றன! ஒவ்வொரு சோள முத்தாக கடித்துச் சாப்பிட்டால், முத்து போல ஆரோக்கியம் நமக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

குடற்பகுதியில் நலம் பயக்கும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை சோளத்தின் நார்ச்சத்து அதிகரிப்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சள் சோளத்தில் உள்ள நிறமிச்சத்து, பார்வைத்திறனை அதிகரிப்பது மட்டுமன்றி, தேகத்திற்கு பொலிவைக் கொடுக்கவும் உதவுகிறது.

ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் முதன்மை சிற்றுண்டியாக சோளத்தை நாடலாம். சிறுவர் சிறுமிகளுக்கு விருப்ப சிற்றுண்டியாகவும் சோளம் மாறும் என்பதில் சந்தேகமில்லை. அவர்களுக்குப் பிடித்த மாதிரி சோளத்தை தயார் செய்து வழங்கலாம்.


மக்காச் சோள மாவு:

மக்காச் சோள மாவு பஞ்ச காலங்களில் பலரது வறுமையைப் போக்கிய வரலாற்றை பலரும் அறிவார்கள். இப்போதும் ஊட்டம் தேவைப்படுபவர்கள் மக்காச் சோள மாவை வைத்து சிற்றுண்டி ரகங்களைத் தயாரிக்கலாம். மக்காச் சோள மாவை வைத்து கஞ்சி செய்து, ஊட்ட உணவாக தாராளமாகப் பயன்படுத்தலாம். சுற்றுலா தலங்களில் கிடைக்கும் சிற்றுண்டி ரகமான சோளத்தின் மருத்துவ குணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.


எது எப்படியோ சோளத்தை வேகவைத்தோ, நெருப்பில் சுட்டோ வீட்டிலேயே சாப்பிடலாம் என்றாலும், சில்லென்ற மலைப்பகுதியில் சோளத்தைச் சுட்டு சாப்பிடுவது தனி அனுபவம்தான். `இடம் பொருள் ஏவல்.' வாழ்க்கைக்கு மட்டுமல்ல, உணவுக்கும்தான்!

No comments:

Post a Comment